திங்கள், 26 அக்டோபர், 2015

பிள்ளையாரும்-ராமரும் சிறுகதை

          முன்னுரை

வணக்கம்! பொதுவா நம்ம எல்லாருக்கமே  சில நேரங்கள்ல தோணுகிற,  குறிப்பா கஷ்ட காலங்கள்லயும், சோதனையான காலங்கள்லயும் தோணுகிற,   கடவுள்  இருக்காரா, இல்லையாங்கிர ஒரு சாதாரண மனக்குழப்பம் தான் இந்த கதையோட கரு. மிகச்சாதாரண ஒரு ஆள், அவனுக்கு   உண்டாகுற மனப்போராட்டங்களை , என்னோட சின்ன வயசுல நான் பார்த்த சில சம்பவங்களோடு என்னோட கற்பனையும் சேர்த்து எழுதப்பட்டதே இந்தக்கதை.


மேலும் நம்ம குழந்தைப்பருவத்துல  மனசுல ஆழமா பதிஞ்சு போன சில விஷயங்கள, என்ன தான் பெரிய ஆளா வளந்து நெறய படிச்சு, வேற மாற்று எண்ணங்கள் மூலமா அத மூடி மறைக்கப் பாத்தாலும், அது, மண்ணுக்குள்ள போட்ட வெத மாதிரி என்னைக்காவது ஒரு முட்டி மொளச்சு வெளில வரும் என்பதற்கு எடுத்துக்காட்டே இந்தக்கதையின் முடிவு.







சிறுகதை.,

உருவாக்கம்,.,.,. நேத்தா.

  21.10.2015.






     பிள்ளையாரும் ராமரும்

           -------------

தென்கிழக்குச்சீமயில்,,
எப்படிப்பார்த்தாலும் எண்ணிக்கையில் ஐம்பதைத் தாண்டாத வீடுகளைக்கொண்ட ஒரு சின்னக்கிராமம் தான் சொக்கனூர். விவசாயக்கிராமம், முழுக்க முழுக்க மழைய மட்டுமே நம்பியிருக்கும் வானம் பார்த்த பூமி.

அங்க தான் 1980களின் தொடக்கத்தில் ஒரு நடுத்தரக்குடும்பத்து தம்பதிக்கு ரெட்டக்குழந்தை பிறந்தது, இரண்டுமே ஆண். ராமர்-லட்சுமனன் என்று பெயரிட்டார்கள். மூன்று மாதங்களுக்குப்பிறகு லட்சுமனன் இறந்து போக மிஞ்சியவன் தான் ராமர்.



ஊரை ஒரே பக்கமாக ஒதுக்கிவிட்டு சின்னதா  சாலையொன்று போகும், ஊரின் மையப்பகுதியில் சாலையின் மறுபக்கத்தில் ஒரு பிள்ளையார் கோவிலொன்று இருக்கும். கோவிலுக்கு பின்னால் ஒரு குளமும் இடமும் வலமும் வேப்பமரம் புளியமரம் வாகைமரம் என வரிசையாக நின்றிருக்கும்.



ஊர்க்கூட்டம், பஞ்சாயத்து, விசேச நிகழ்ச்சி, பிறகு சின்னஞ்சிறுசுக வெளையாடுற கபடி, கிட்டிப்புல், கிளித்தட்டு, ராத்திரில நிலாப்பூச்சி, ஐஸ்பால், பூப்பறிக்க வருகிறோம் னு இப்படி அத்தனையும் பிள்ளையார் கோவில் முன்னாடி தான் நடக்கும். எல்லாத்தையும் வேடிக்கை பார்த்துக்கிட்டே உட்காந்திருப்பாரு விநாயகரு.



இப்ப நம்ம ராமருக்கு ஓரளவு வெவரம் தெரியிற வயசு, தெனமும் பொழுதுசாய அவனோட அம்மா பிள்ளையாருக்கு சூடம் கொளுத்தி சாமி கும்பிடுறது வழக்கம், ராமரையும் தவறாம கூட்டிட்டு போவாங்க, அதோட சாமி எப்படி கும்பிடணும்னு, தப்பு செஞ்சா, பொய் சொன்னா, திருடினா, பள்ளிக்கூடம் போகலைனா சாமி வந்து ராத்திரி கண்ணக்குத்திடும்னும் ராமர்க்கு அடிக்கடி சொல்லுவாங்க. இப்படித்தான் ராமருக்கு பிள்ளையார் அறிமுகமானார் முதல் கடவுளாக.



பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் பைய வீட்ல வச்சிட்டு முதல் வேலையா பிள்ளையார் கோவிலுக்குத்தான் வருவான், பிள்ளையார் மேல கிடக்கிற காஞ்ச பூ, மாலை எல்லாத்தையும் சுத்தம் செஞ்சிட்டு அப்பரமாத் தான் வௌயாடப்போவான் பயலுகளோட. மார்கழி மாசம் வந்துட்டா, இன்னும் கொண்டாட்டமாயிருக்கும் ராமருக்கு. மாசம் முழுதும் கோயில்ல ரேடியோ வச்சு பாட்டு போடுவாக, தெனமும் காலைல பொங்கல் வச்சு பூசை பண்ணுவாக பிள்ளையாருக்கு. பூசைக்கு பிள்ளையார தயார் செய்யிறதும் பொங்கல் வைக்கிறங்களுக்கு ஒத்தாசை செய்யிறதுனு ரொம்ப சந்தோசமா இருக்கும் ராமருக்கு.



பயலுக எல்லாரும் களிமண்ணெடுத்து பஸ், லாரி, கார், மாடுனு செஞ்சு வௌயாண்டா ராமர் மட்டும் களிமண்ணுல பிள்ளையார அப்படியே சிலையா செஞ்சிருவான், அத எடுத்திட்டுப்போயி வீட்டுக்கு பின்னாடி வச்சு ஒடஞ்ச செங்கல் ஓடு எல்லாத்தையும் சேர்த்து குட்டியா ஒரு கோயிலே கட்டி, கருவேலம்பூவுல மாலை கட்டி பூசையும் செஞ்சிடுவான்.



ஊர்ல மழை தண்ணி பெய்யலைனா, மழை வேண்டிக்கிட்டு, பொம்பளைக பௌர்ணமி ராத்திரி அன்னைக்கி ஆரம்பிச்சு தொடர்த்து மூனு நாளைக்கு மொளக்கொட்டு(கும்மிப்பாட்டு) கொட்டுவாக. அதுக்கு ராத்திரி ஒவ்வொரு வீட்லயும் சோத்துல தண்ணி ஊத்துறதுக்கு முன்னாடியே போயி ஒவ்வொரு கைப்பிடி அளவு வெறுஞ்சோறு வசூலிக்கணும்.



இன்னைக்கு ராத்திரி மொளக்கொட்டுன்னா காலைலயே ஊர்ல தண்டோரா போட்டு சொல்லிடுவாக, ஊர்ல பொதுவான விசயத்தை எல்லாருக்கும் தெரியப்படுத்தணும்னா பக்கத்து ஊரு பூதக்குளம் செகப்பன கூப்பிடுவாக, 2 ரூபாயோ 3 ரூபாயோ கூலியா வாங்கிட்டு காலைலயே ஆரம்பிச்சிருவான் தண்டோராவ செகப்பன்.

டமடம டமடம டமடம டம்ம்ம,,,
சொக்கனூர் அய்யாக்கமாரு ஆத்தாக்கமாரு நல்லா கேட்டுக்கங்க,,, அதாவது ஊர்ல பருவமழை தப்பிப்போனதால காடுகறை இன்னும் உழுது வெதைக்காம கெடக்கு. அதனால நம்ம சடச்சியம்மாவ வேண்டிக்கிட்டு நம்ம ஊரு ஆத்தாக்கமாரு இன்னைக்கி ராத்திரி மொளக்கொட்டு கொட்டப்போறாக, எல்லாரும் பிள்ளையார்கோயில் களத்துக்கு வரணும்னு ஊரு சார்பா கேட்டுக்கிறேன் சாமியோவ்,,, டமடம டமடம டம்ம்ம்........

அன்னைக்கி காலைலயிருந்தே ராமருக்கு தலைகால் புரியாது, எப்படா சாயங்காலமாகும்னு இருப்பான். சோறு வசூலிக்க பனை ஓலைல செஞ்ச ஓலப்பொட்டி தயாரிக்கிறதுல ஆரம்பமாயிடும் அவனோட அன்னைக்குப்பொழுது. இன்னும் நாலு அவென் வயசுப்பயலுகள கூட்டிக்கிட்டு பொழுதுசாயவும் கிளம்பிருவான் வீடு வீட்டுக்கு மொளக்கொட்டுச்சோறு போடுங்க மொளக்கொட்டுச்சோறு போடுங்கனு.



இப்ப வசூலிச்ச பொட்டிச்சோத்த பிள்ளையாருக்கு பக்கத்தில வச்சிருவாக,, ஒரு ஏழு ஏழரையப்போல நண்டு சிண்டு, எளவட்டங்க, பெருசுக எல்லாம் பிள்ளையார்கோவிலுக்கு வந்து அங்கங்க வசதிக்கேத்த மாதிரி உட்காந்துருவாக. அப்பரமா தான் குமரிப்பிள்ளைகளும் பொம்பளைகளும் ரெண்டு ரெண்டு பேரா வந்து சேருவாக, சூரியனப்பாத்த பனி போல ஆம்பளைகளப் பாத்ததும் பம்மி பம்மி.



அப்பலாம் பொண்ணுக பருவமடைஞ்சா அதிகமா வெளில வரமாட்டாக, இதுபோல ஏதாச்சும் விசேசங்கள்ல பாத்துக்கிட்டாத்தான். ஊர்ல மொளக்கொட்டுப்பாட்டு தெரிஞ்ச ஒரே ஆளு ஆயா டீச்சரம்மா மட்டும் தான், கடைசியா அவுகளும் வந்து சேர,,, ராமர் மாதிரி ரெண்டு மூனு சின்னப்பயலுகள நடுவுல உட்கார வச்சு ஆரம்பமாயிரும் மொளக்கொட்டு. டீச்சரம்மா பாடப்பாட அத அப்படியே திரும்ப சொல்லிக்கிட்டு சுத்தி சுத்தி வந்து கொட்டுவாக பொண்ணுகளும் பொம்பளைகளுமா,,,



ஒருமணி நேரம் தொடர்ந்து கொட்டுவாக,, பொம்பளைக வீட்டுக்குப்போன பிறகு எளவட்டப்பயலுக எடுத்துட்டுப்போயிருவாங்கெ வாங்கிவச்ச சோத்துப்பொட்டிய,,,  வசூலிச்ச ராமருக்கு கடைசியா கிடைக்கும் ஒரு கைப்பிடி சோறு, கொழம்பு, கூட்டுப்பொறியல் எதுமிருக்காது ஆனா அத்தன வீட்டுச்சோறும் ஒண்ணா கலக்குறதாலயோ என்னவோ அப்படி ஒரு ருசியா இருக்கும் அந்த வெறுஞ்சோறு. மொளக்கொட்டு முடிஞ்ச மூனாவது நாள் எப்படியும் மழை பேஞ்சிடும். இந்த ஒரு விசயம் மட்டும் ரொம்ப நாளா புரியல ராமருக்கும், ராமர மாதிரியே நம்மளுக்கும்.




ஐப்பசி மாச அடமழை ராத்திரி ஒருநாள் ராமரோட அம்மாவுக்கு திடீர்னு குளிர் காய்ச்சல் வந்து தூக்கி தூக்கி அடிக்கிது, தைலம் தேச்சு விடுறாக, சுக்கு காபி குடுக்குறாக, அஞ்சாறு போர்வைய போட்டு போத்திப்பாக்குறாக, ம்ம்ஹூம் எதுக்கு நிக்கல, சிக்கலூர் ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோகலாம்னு  பாத்தா மழை வேற விடாம பெஞ்சுக்கிட்டிருக்கு என்னமோ வானமே ஒடைஞ்சமாரி. மாட்டுவண்டிய தவிர போக்குவரத்து வேற எதுவுமில்லை அந்நேரம். சரி மழை கொஞ்சம் வெறிச்சதும் வண்டில போகலாம்னு பேசிக்கிட்டு இருக்காக நாலஞ்சு பெருசுக, எல்லாத்தையும் கேட்டுக்கிட்டு இருந்தான் ராமர்.




ராத்திரி அந்தப்பக்கம் தனியா போக பயப்படுற பய ராமரு, இப்ப ஒத்தையில ஓடுறான் பிள்ளையார் கோயிலுக்கு, மழை, கரண்ட் இல்லாம கும்மிருட்டா வேற இருக்கு, பிள்ளையார் முன்னாடி நின்னான்,
"பிள்ளையாரப்பா எங்க அம்மாவுக்கு காய்ச்சல இல்லாம
செஞ்சிட்டினா காலைல எனக்கு வாங்கித்திண்ண அம்மா குடுக்குற 50 பைசாவுக்கும் உனக்கே ஊதுபத்தி வாங்கி வச்சிடுறேன்" அவனுக்கு மொழில வேண்டிக்கிட்டான். அது தான் பிள்ளையார்கிட்ட ராமர் வைத்த முதல் வேண்டுதல்.



கண்ண மூடிக்கிட்டே குடுகுடுனு வீட்டுக்கு ஓடினான், அம்மா தூங்கிப்போயிருந்தாங்க. அப்பா மட்டும் உட்காந்திருந்தார், அவர் மடியில படுத்துக்கிட்டான். காலைல எழுந்து பாக்கும்போது அம்மா வழக்கம்போல வீட்டு வேலைகள செஞ்சுட்டு இருந்தாங்க, "அம்மா காய்ச்சல் விட்ருச்சாம்மா உங்களுக்கு" ராமர் கேட்டான், விட்ருச்சுய்யா!! உன் பள்ளிக்கூடப்பை மேல 50 பைசா வச்சிருக்கேன் எடுத்திட்டுப்போயி முக்குழி(குழிப்பனியாரம்) வாங்கிக்கனு அவங்க சொல்லி முடிக்கல, காச எடுத்துக்கிட்டு வேகமா ஓடுனான் ராமர், முக்குழி கடைக்கு இல்ல, பொட்டிக்கடைக்கு ஊதுபத்தி வாங்க பிள்ளையாருக்கு. தன்னோட முதல் வேண்டுதல நிறைவேத்துனதால பிள்ளையார் மேல ராமருக்கு பிரியம் கூடிப்போச்சு.



கோடை விடுமுறைல பயலுக எல்லாரும் கிளிக்குஞ்ச எடுத்து வந்து வீட்ல வளப்பாங்கெ, ராமருக்கும் கிளி வளக்க ரொம்ப ஆசை, அம்மாகிட்ட கேட்டான், "கிளியெல்லாம் வளக்கக்கூடாதுப்பா பூன பிடிச்சுத்திண்ணுட்டுப் போயிரும், அப்பரம் கிளிப்பாவம் பொல்லாதது நம்மளத் தான் வந்து சேரும்னு சொல்லி மறுத்துட்டாக.



இது வெளில உட்காந்து கஞ்சி குடிச்சிட்டு இருந்த சட்டியம்மா காதுல விழுந்துருச்சு. சட்டியம்மா, ராமர் வீட்ல சின்ன வேலைகள செஞ்சு குடுக்கிற ஆளு, பக்கத்தில இருக்கிற பூதகுளம் தான் ஊரு. அப்ப அத கேட்ட சட்டியம்மா சொல்லுச்சு,,,,, "சின்னய்யா எங்க வீட்டு நாயி அஞ்சாறு குட்டிக போட்டுருக்கு, நல்லா குட்டியா ஒண்ணு தூக்கித் தாறேன் வளக்குறியளா"



உள்ளயிருந்து ராமரோட அம்மா குரல்,,,, "சட்டியம்மா நீ சும்மா இருக்கமாட்டியா??! அவனே எப்ப எத வளக்கலாம்னு திரியிறான், இதுல நீ வேற ஏவி விடாதே,,, "நாயி நல்லது தான ஆத்தா, விடியக்ககாலமும், சாயங்காலமும் இத்தினி பால ஊத்திப்போட்டா குடிச்சிட்டு அதுபாட்ல கெடக்கும்னு சட்டியம்மா சொன்னதும் அதயே இப்ப பிடிச்சுக்கிட்டான் ராமர்.



கடைசியா அம்மாவ சம்மதிக்க வச்சு, கௌம்பிட்டாக குட்டிய தூக்க சட்டியம்மா வீட்டுக்கு. போயி பாத்தா அம்புட்டு குட்டிகளும் அப்ப தான் கண்ண தொறந்து பாக்குதுக ஒலகத்த. இப்ப இருக்கிறதுலயே நல்ல குட்டியா இருந்த ஒரு சுத்த வெள்ளைல கழுத்துல மட்டும் காவிக்கலருல கெடந்த குட்டிய தூக்கி ராமர் கைல குடுத்துருச்சு சட்டியம்மா, குட்டிக்கண்ணுல ராமர அது பாக்கவும், ஏய் என்னய பாக்குது பாக்குதுனு வீட்டுக்கு கொண்டு வந்துட்டான்,



கூட்டி வந்து காட்டுறான் கூட்டாளிகள, பிள்ளையார்கிட்ட தூக்கிட்டுப் போயி பேரும் வச்சான் டைகர் னு. பள்ளிக்கூடம்  விட்டு வந்ததும் பிள்ளையார் கோயில் வரை டைகர கூட்டியாந்து திரும்ப வீட்டுக்கு கூட்டிட்டு போவான், அதும் அவன முன்னாடி விட்டு பின்னாடியே ஓடிவரும் லொங்கு லொங்க னு. மூனு மாசத்து குட்டியா வளந்து நிக்குது நல்ல கொளு கொளுனு.


சாயங்காலம் பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் டைகர தேடுறான் காணோம்,, டைகர எங்கம்மா அம்மாவ கேட்டான்,,, நான் தான் அப்பவே சொன்னேன்ல எதயும் வளக்காதேனு, இப்ப பாரு மேல வீட்டுப் பெரிய நாயி டைகர கடிச்சிருச்சு கழுத்துலயே. நல்லா பதிஞ்சிருக்கு பல்லு. உங்கப்பா சுண்ணாம்பு போட்டுவிட்ருக்காரு, போயிப்பாரு கொட்டகையில தான் கெடக்குனு அம்மா சொல்லவும் வேகமா ஓடுனான் கொட்டகைக்கு.



சாக்குப்பை மேல படுத்துக்கிடந்த டைகர் இவன பாத்ததும் லேசா தலய தூக்கிப்பாத்துட்டு மறுபடி படுத்துக்கிச்சு. வலியில முனகிட்டு இருந்துச்சு. அப்பாட்ட ஓடி வந்து கேட்டான்,,, டைகர் செத்துருமாப்பா? அப்படி எல்லாம் ஒண்ணும் ஆகாதுப்பா காலைல சரியாயிடும்னு அப்பா சொல்லவும்
பிள்ளையார்கிட்ட ஓடுனான், டைகர காப்பாத்திடு ரெண்டு ஊதுபத்தி வாங்கி கொளுத்துறேனு, அம்மாவுக்கு காய்ச்சல் வந்தபோது வேண்டினது போல வேண்டிக்கிட்டு வீடு வந்தான்.

ராத்திரியெல்லாம், வேதனைல டைகரோட முனகல் சத்தம் அவன தூங்கவிடல. விடியக்காலம் முனகல் சத்தமும் நின்னுச்சு, ராமரும் தூங்கிப்போனான். காலைல எழுந்திரிச்சவன் கிட்ட வந்து அப்பா சொன்னாரு,,, டைகர் செத்துப்போச்சுப்பா ராமரு. ஏறக்குறைய அழுக வந்துருச்சு ராமருக்கு. அப்பரமா தூக்கிட்டுப்போயி கொள்ளைல குழி தோண்டி பொதச்சு அது மேல ஒரு வேப்பங்கன்ற நட்டுவச்சிட்டு வந்தாக தகப்பனும் புள்ளையும். வர்ற வழில பிள்ளயாரப் பாத்ததும்
சின்னதா ஒரு கோபம் வந்தது பிள்ளையார் மேல ராமருக்கு.



ராமருக்கு ஒரு ஒன்பது பத்து வயசிருக்கும், அப்ப கார்த்திக் நடிச்ச 'கிழக்கு வாசல்' படம் நல்ல பிரபலமாகியிருந்த நேரம், ராமரும்
அவனோட சினேகிதன் சாலக்கண்ணனும் கார்த்திக்னா அவ்வளவு இஷ்டமாயிருப்பாங்க, பேப்பர் போஸ்டர் இப்படி எதுல கார்த்திக்க பார்த்தாலும் அத கிளிச்சிட்டு வந்து வீட்ல ஒட்டிக்குவாங்கெ. சாலக்கண்ணன் ராமர விட கொஞ்சம் பெரியவன் தான் ஆனா ஊர்ல எல்லாரும் அவன பூட்டி பூட்டினு தான் கூப்பிடுவாங்க,  ஆனா  ராமர் மட்டும் சாலு அண்ணானு பேர சொல்றதுமில்லாம அண்ணானு வேற பாசமா கூப்பிடுவான்,, இதனாலயே பூட்டிக்கு ராமர மட்டும் தான் பிடிக்கும்.

கிழக்குவாசல் படம் பார்த்துட்டு ராமரும் சாலுவும், கார்த்திக் நெத்தியில பூசியிருக்கிற மாதிரியே நம்மளும் பூசிக்குவோம்னு முடிவெடுத்து பிள்ளையார்கிட்ட வந்தாங்கெ, பிள்ளையார்மேல ஒட்டியிருந்த குங்குமத்த எடுத்து அவனுக்கு இவனும் இவனுக்கு அவனும் பூசிக்கிட்டாங்கெ, ஆனா குளிக்கும்போது வௌயாடும்போது அழிஞ்சிடுமேனு சாலு சொல்ல வேற ஒரு முடிவுக்கு வந்து,  ரெண்டுபேரும் ஆள்காட்டி வெரல நடு நெத்தில வச்சு நல்லா தேய்ச்சாங்கெ பத்து நிமிசம். பிஞ்சுத்தோலு லேசா உரிஞ்சு, கீழ விழுந்து உராசினா எப்படி இருக்கும் ரத்தம்கெட்டி அப்படி இருக்கு ரெண்டு பேருக்கும் நெத்தி.

கைய நெத்தியில வச்சு மறச்சு மறச்சு வீட்டுக்குப்போன ராமருக்கு அன்னைக்கித் தான் மொத மொதலா அடி கெடச்சது அம்மாகிட்ட. சாலுவுக்கு என்ன நடந்ததுனு சாட்சி சொல்ல பிள்ளையாரத்தான் கூப்பிடணும்.



அப்பல்லாம் சினிமா பாக்கணும்னா பக்கத்துல 3 கி.மீ தூரத்தில சிக்கலூருக்குப் போகணும், புதுப்படம் பாக்கணும்னா 30கி.மீ தூரத்தில இருக்கிற ராமபுரத்துக்கு போகணும், அப்ப ஊர்ல யார் வீட்லயும் டிவி கிடையாது. வெள்ளிக்கிழமை ஒலியும் ஒளியும், ஞாயிற்றுக்கிழமை படம் எல்லாம் பக்கத்து ஊரான பனிக்குளத்தில தான். அது போக ஊர்ல ஏதாச்சும் விசேசம்னா வாடகைக்கு டிவியும் டெக்கும்(வீடியோ கேசட் பிளேயர்) மேலக்கரைல இருந்து எடுத்து வந்து ஒரே ராத்திரில மூனு நாலு சினிமா போடுவாக.



இப்படி இருக்க பொங்கலன்னைக்கி படம் போடுறதா எளவட்டப்பயலுக பொம்பளைக எல்லாம் சேர்ந்து முடிவுவெடுத்துட்டாக, நண்டு சிண்டு எல்லாம் மத்தியானத்திலிருந்தே தூங்க ஆரம்பிச்சிருச்சுக! ஏன்னா விடிய விடிய உட்காந்து எல்லாப்படத்தையும் பாத்துடணுமாம். ராமரும் கூட்டாளிகளோட ஒரே கொண்டாட்டத்தில திரியிறான். தெருவுக்குள்ள போகும்போதும் வரும்போதும் பொண்ணுங்க எல்லாம் கேக்குறாக 'டேய் ராமரு என்னென்ன படம் கொண்டுவராக' டிவி வந்தப்பரம் பாத்துட்டு வந்து சொல்றேனு சொல்லிட்டு ஓடுறான்.

ஏழு மணிக்கெல்லாம் பயலுக பிள்ளைக, பக்கத்து ஊரு சனம் அம்புட்டும் ஊரு நுழைவுல இருக்கிற வீட்டுத்திண்ணைல வந்து உட்காந்துருவாக டிவி கொண்டுவார பிளசர் கார பாக்குறதுக்கு. தூரத்துல ஒரு வெளிச்சம் தெரியவிடறதில்லை ஏய்! டிவி வந்திருச்சு டிவி வந்திருச்சுனு கத்துறது, கடைசில அந்த வெளிச்சம் பக்கத்தில வந்தப்பரம் தான் தெரியும் சைக்கிள்னு. அந்தா இந்தா டிவி கொண்டுவார காரே வந்து சேந்துடும எட்டு மணி வாக்குல.

டிவி வந்து சேந்தாலும் கரண்ட் வேணுமே!!!? கரண்ட் இருக்கும் டிவி ஓடுறதுக்கு போதாத அளவுக்கு இருக்கும், அத காக்கரண்ட், அரக்கண்ட்னு சொல்லுவாக. ஒரு ஒன்பது மணிவாக்குல முழுக்கரண்ட் வந்துரும், இந்த டிவி ஆபரேட்டருக்கு அப்படி ஒரு மரியாத குடுப்பாக ஊருக்குள்ள, சேர்ல உட்காருங்கனுவாக, காபி குடிங்கெனுவாக! இது போதாதா அவருக்கு!? அவரு ஒரேயடியா உச்சியில ஏறி உட்காந்துக்கிருவாரு. சின்னப்பயக யாராச்சும் 'அண்ணே என்னென்ன படம் கொண்டாந்திருக்கிய' னு கேட்டா ஒரே சலிப்பா சலிப்பாரு. ஏய்,,, ஓடுங்கடா படம் போடும்போது பாத்துக்கங்கடானு வெரட்டிவிட்ருவாரு.



இப்படி இருக்க, ஆப்பரேட்டர் கொஞ்சம் அசந்த நேரம் பாத்து ராமர் நைசா படக்கேசட் வச்சிருக்கிற பைக்குள்ள தலைய விட்டு பார்த்தான்,,,, நாலஞ்சு கேசட்ல மேல இருந்த கேசட்ல 'வருசம் 16' னு எழுதியிருந்தத படிச்சிப்புட்டான்,,, அவ்வளவு தான் ஏய்!!  கார்த்திக் படம் வருசம் 16 கொண்டு வந்திருக்காகனு கத்திக்கிட்டே இன்னும் ரெண்டு பயகல சேத்துக்கிட்டு கெழக்குத்தெருவுக்கு ஓடுறான், மந்தித்தெருவுக்கு ஓடுறான்.


பிள்ளையார்கோயில் முன்னாடி நாற்காலியப்போட்டு டிவிய தூக்கி வச்சு வயரிங் வேலைகள் நடந்துட்டு இருக்கும் ஒரு பக்கம், இன்னொரு பக்கம் சின்னஞ்சிறுசுக பாய் போர்வைய எடுத்து வந்து எடம் பிடிச்சுக்கிட்டிருப்பாக, உள்ளூருக்காரவுகளுக்கு முன்னாடி எடத்த விட்டுட்டு பின்னாடி உட்காந்திருப்பாக பக்கத்து கிராமங்களான பூதக்குளம், பனிக்குளத்துச்சனங்க.



ஒரு 18 க்கு 22 அங்குளத்துல ஒரு டிவியில சினிமா பாக்குறதுக்கு இத்தனை ஆர்ப்பாட்டமானு இப்ப எல்லாரும் நெனக்கலாம், 1989-90 களில் உண்மையிலயே தமிழ்நாட்டுல அனேக கிராமங்களிலும் இதே நிலை தான் இருந்திருக்கும். சின்ன விசயமா இருந்தாலும் ஊரே கூடி கொண்டாடுறது தான் அப்போ வழக்கம், இப்ப தான் ஒவ்வொரு குடும்பத்தோட ஒலகமும் வீட்டுக்குள்ள வந்துவிட்ட டிவிக்குள்ளயே சுருங்கிப்போச்சு.



அது அப்படியே இருக்கட்டும் நாம கதைக்கு வருவோம், இப்ப எளவட்டங்கள்ல ரெண்டு கோஷ்டி இருக்கு, ஒண்ணு ரஜினி படம் தான் மொதல்ல போடணும்னு சொல்ல, இன்னொரு கோஷ்டி கார்த்திக் படம் தான் மொதல்ல போடணும்னு சொல்ல, இதுக்கு இடையில பொம்பளைக 'ஏப்பு டிவிக்கு வாடகை குடுக்குறது நாங்க ஒழுங்கா ராமராஜன் படத்த மொதல்ல போடுங்கனு வர (எங்க ஊரு பாட்டுக்காரன், கரகாட்டக்காரன்னு ராமராஜனுக்கு கிராமத்து ரசிகர்கள் அப்படி இருந்த நேரமது) இத கேட்ட ரெண்டு மூனு பெருசுக வந்து "ஏப்பா பொங்கல் அதுவுமா சாமி கும்பிட்டு படம் போடுறோம் பேசாம மொதல்ல சாமிப்படத்த போடுங்கப்பா னு " அதட்டவும்,
எல்லாம் போச்சுடான்னு கலஞ்சு போனாக வாதம் பண்ணின கோஷ்டிக மூனும்.



கடைசில பெருசுக முடிவுப்படியே சாமிப்படம் தான் மொதல்லனு சொல்லி போட்டாக சாமிப்படம் "திருவிளையாடல்" இது நாள் வரை தனக்கு பிடிச்ச பிள்ளையார சிலையாகவும் போட்டாவுலயும் பாத்து வந்த நம்ம ராமருக்கு முதல் முதலா சினிமால நடக்குறதும், பேசுறதுமா இருந்த பிள்ளையார கொஞ்ச நேரம் கண்கொட்டாம பாத்துட்டு இருந்தவன் அப்படியே தூங்கியும் போனான்.



  உள்ளூரிலயே ஐந்தாவது  படிச்சு முடிச்ச ராமர் இப்ப    ஆறாவதுக்கு  ராமபுரம் போயி சேந்தாச்சு, விடுதியில தான் தங்கனும், 30கி.மீ தெனமும் பஸ்ல போயிட்டு வரமுடியாதுல,,,
அந்தப்பள்ளி ஒரு கிருத்துவ மிஷன் பள்ளி, காலைலயும் சாயங்காலமும், ஏசுநாதர் பாடல்களப்பாடிக்கிட்டு ஜெபம் பண்ணுறது, ஞாயிற்றுக்கிழமைகளில் சர்ச்க்கு போறது அங்க கட்டாயம், ராமருக்கு அது வேற ஒரு உலகமாகவே தெரிஞ்சது.


பிள்ளையார் தான் கடவுள், அவர் படச்சது தான் இந்த உலகம்னு நினைச்சிட்டு இருந்த ராமருக்கு, ஏசு தான் கடவுள்னு சொல்லவும் அந்தப்பிஞ்சு மனசுல சின்னதா  குழப்ப விதை ஒன்று  வேர் விட ஆரம்பித்திருந்தது.    பத்தாவது வரைக்கும் எப்படியோ அங்கேயே படிச்சான், பரீட்ச எழுதியிட்டு


விடுமுறைக்கு வீட்டுக்கு வந்தவன் விடுதிக்கு திரும்ப போகவே மாட்டேன், என்ன போக சொன்னா  படிக்கவே மாட்டேனுட்டான்.   சரிப்பா விடுதிக்குப் போக வேணாம், பள்ளிக்கூடத்துக்கு போயிட்டு பஸ்ல வீட்டுக்கு வந்திடுனு சொல்லி எப்படியோ சம்மதிக்க வச்சாக ராமரோட அப்பாவும் அம்மாவும்.


தெனமும் போயிட்டு வந்ததில போக்குவரத்துக்கே நேரம் சரியாப்போக படிக்க போதுமான நேரமில்லாம, அதுவரைக்கும் எல்லா வகுப்புலயும் படிப்புல மொத ரேங்க் வந்த ராமர் மூனே மாசத்தில பத்தாவது ரேங்க்கு சரிஞ்சு வந்துட்டான் சர சரனு. விடுதிக்காப்பாளருக்கு ராமர் மேல இருந்த அக்கரையில  அவனோட பெற்றோரிடம் பேசி திரும்ப விடுதிக்கே அழைச்சிட்டுப் போயிட்டார். பத்தாவது ஆளா இருந்தவன் அடுத்த மூனே மாசத்தில மறுபடி முதல் ஆளாவே வந்து அசத்தினான் ராமர்.


பனிரெண்டாவது முடிச்ச ராமருக்கு இப்ப 16 வயதிருக்கும் எளம்பருவம், விடுமுறைல ஊர்ல இருக்கான். அப்ப தான் நாலஞ்சு வருடங்களுக்கு அப்பரமா தேவிய பாக்குறான். தேவியும் அதே ஊரு தான் ஆனா அவளோட அப்பா அரசாங்க பஸ் ஓட்டுநரா ஆனதால மதுரையிலயே குடியேறியிருந்தாங்க. விடுமுறையில மட்டும் சொக்கனூர்க்கு வந்து அவ அத்தை வீட்ல இருந்துட்டு போவது வழக்கம்.

தேவியோட அத்தை பொண்ணு நந்தினியும் ராமரும் நல்ல கூட்டாளிக, தேவியும் ராமரோட சின்ன வயசுல ஒண்ணா மண்ணா வௌயாண்டு திரிஞ்சவ தான். ஆனாலும் நீண்ட இடைவெளிக்கு பிறகு பருவ வயதுல ரெண்டு பேரும் சந்திக்கிறதால பேசிக்கல ரெண்டும், அங்க புதுசா ஒரு அறிமுகம் தேவைப்பட்டது அவுகளுக்கு.

தேவி ராமர விட ஒரு வயசு சின்னவ தான், பட்டணத்தில இருப்பதால, எப்ப ஊருக்கு வந்தாலும், அந்த பட்டணக்கலைல அவ மட்டும் தனியா தெரிவா. ஊர்ல பசங்களுக்கு அவ மேல ஒரு கண்ணு இல்ல ரெண்டு கண்ணும் தான். இப்ப 15 வயசுல பாக்குறதுக்கு சினிமா நடிகை இதயம் பட நாயகி ஹீரா சாயல்ல இருந்தா தேவி.



இப்படி நெறைய காரணங்கள்ல ஏதோ ஒண்ணு ராமரோட மனசுல தேவியப்பத்தின நெனப்பயே திரும்பத் திரும்ப தீண்டச்செய்தது.
இருக்கிறதுலயே நல்ல புதுசா இருக்கிற சட்டைய பாத்துப் போட்டுக்கிட்டு நந்தினி வீட்ட நாலஞ்சு முறை சுத்தி வருவான். ஆறாவது முறை நந்தினி பாத்திருச்சு, "என்ன ராமரு வீட்டுக்கு வரமாட்ற ஏன்? தேவி வந்திருக்கா தெரியுமா னு வேற நந்தினி கேட்க,,,, அதனால தானே சுத்தி சுத்தி வந்துட்டு இருக்கேனு மனசுக்குள்ளயே சொல்லிக்கிட்டு, "அதெல்லாம் ஒண்ணுமில்லை நந்தினி, தேவி வந்திருக்கா எப்போ வந்துச்சுனு" வேற கேட்டுக்கிட்டான்.

பக்கத்தில இருந்த தேவி நெனச்சிக்கிட்டா,,, அடப்பாவி காலைல ஊர்லயிருந்து வரும்போதே பாத்தியே,!,!?,?
 அப்ப வீடுகள்ல வெளித்திண்ணைய மறைக்க தென்னந்தட்டி(தென்னை ஓலைல செய்யிற கதவு) கட்டியிருப்பாக முக்காவாசி வீடுகள்ல. அந்த தட்டி ஓட்டை வழியா தேவி ராமர பாக்குறத நந்தினி பாத்துட்டா. "ஏய் என்ன அவன ஒழிஞ்சு பாக்குற" னு நந்தினி கேக்க, "சும்மா தான் பாத்தேன் அக்கா" னு தேவி சொன்னா.



ஊருக்கு கெழக்க ஒரு கண்மாய் இருக்கும், ஓரளவு தண்ணி எப்போது இருக்கும், அதுல தொட்டாச்சிணுங்கி செடியும் இன்னொரு பேரு தெரியாத செடியும் எப்போதம் பாக்கலாம், எல்லாரும் அங்க தான் குளிப்பாக, எளவட்டங்க, ஆம்பளைக காலைல மத்தியானம்னு குளிப்பாக, பொம்பளைக பொழுதுசாயத் தான் குளிப்பாக பெரும்பாலும்.


தேவி என்ன பண்ணுச்சுனா, ரெண்டு சிறுகள கூட்டிக்கிட்டு மத்தியான நேரமா குளிக்க போயிருச்சு, கோடைமழை பேஞ்சு முக்காக்கண்மாய்க்கு தண்ணி கிடந்துச்சு. ராமர், சாலக்கண்ணு இன்னும் ரெண்டு மட்டப் பயலுக நடுத்தண்ணில கெடந்த தொட்டாச்சிணுங்கி செடிய தொட்டுத்தொட்டு வௌயாண்டுட்டு இருக்காங்கெ. தேவி துணி துவைக்கிற கல்லு பக்கத்துல உட்காந்து குளிக்கிறத பாத்த அந்த ரெண்டு பயலுகள்ல ஒருத்தன் சொன்னான் "இங்க பார்ரா ஆம்பள பசங்க குளிக்கிறப்ப வந்து குளிக்கிறத வெட்கமில்லாம" இத கேட்டதும்,, "ஏலே அது டவுன்ல இருந்த பிள்ளை தெரியாம இருந்திருக்கலாம்ல " னு ராமரும் சாலக்கண்ணனும் சேர்ந்து சொல்லவும் அதுல ஒருத்தன்,,  "என்ன ராமரு அது என்ன உன் சொந்தக்காரப்பிள்ளையா? நந்தினி வீட்டுக்கு தான் வந்திருக்கு, ஒங்க சொந்தக்காரப்பொண்ணு மாதிரி ஏத்துக்கிட்டு வார? னு கேட்டான்.

ஆமான்டா எங்க சொந்தம் தான் நான் ஏத்துக்கிட்டு வரத்தான் செய்வேன், என்னடா செய்வேனு" ராமர் கை நீட்ட நாலு பேருக்கும் தண்ணிக்குள்ளயே கைகலப்பா ஆகிப்போச்சு. எல்லாத்தயும் வேடிக்கை பாத்த தேவி விறுவிறு கௌம்பி வீட்டுக்கு வந்திடுச்சு, தனக்காக சண்டை போட்ட ராமர பத்தின நெனப்பு இப்ப தேவியோட மனசிலயும் குட்டி குட்டி பட்டாம்பூச்சிகள பறக்கவிட்டுடுச்சு.



ராமர் மனசில தேவியும், தேவி மனசில ராமரும் இருக்கிறத நந்தினி கண்டுபிடிச்சிருச்சு. அப்பரமா நாளு ஓட ஓட நந்தினி போக வர இருந்து தேவி கூட பேச ஆரம்பிச்சுட்டான் ராமர். ரெண்டு பேரும் பேசிக்கிட்டாக நெருங்கி,,, சின்ன வயசு சின்ன வயசு நினைவுகளையும், பகிர்ந்துக்கிட்டாக.

மதுரைல தான் பார்த்த சினிமாக்களோட கதையயும்(அதிகபட்சம் ராமராஜனனோட படமா தான் இருக்கும்) தோழிகளப்பத்தியும், மதுரையப்பத்தியும், தேவி சொல்ல, ராமர் தன்னோட பள்ளி, விடுதி, கூட்டாளிகள பத்தியும் பேசிப்பேசி, தகவல் பரிமாற்றங்களுக்கு மத்தியில மனசுப்பரிமாற்றமும் நடந்துபோச்சு.



விடுமுறை முடிஞ்சு தேவி ஊருக்குப் போறதுக்கு ரெண்டு நாள் இருக்கு, ராத்திரி எட்டு எட்டரையப்போல, நந்தினியும், தேவியும் வீட்டு முற்றத்தில நிலா வெளிச்சத்துல உட்காந்து சாப்பிட்டுகிட்டு இருந்தாக, மெதுவா வந்த ராமர் " ரெண்டு பேரும் பிள்ளையார் கோயிலுக்கு வாங்கனு" சொல்லிட்டு விறுட்டுனு மறஞ்சு போனான்.

என்ன எதுக்கு தெரியாம ரெண்டு பேரும் வேகவேகமா சாப்பிட்டு முடிச்சு யாரும் பாக்காம கோயிலுக்கு போறாக, ஆள் நடமாட்டமில்லாத அந்நேரத்தில ராமர் மட்டும் நின்னுட்டிருக்கான் பிள்ளையாரப்பாத்துக்கிட்டு. பத்தடி தூரத்துலயே நின்னுகிட்டு  தேவிய மட்டும் போக சொல்லிச்சு நந்தினி.
ராமர் பக்கத்தில தேவி போனதும், கையில தயாரா எடுத்து வச்சிருந்த பிள்ளையாரு குங்குமத்த தேவியயோட நெத்தியில பூசியிட்டான்.

ஏய் ராமரு என்ன பண்ணுறேனு, வேற யாரும் கேட்டிறாத அளவு கத்திக்கிட்டே வந்துச்சு நந்தினி. "தேவி பேசாம நிக்க,,,, ராமர் பேசறான் "இல்ல நந்தினி தேவிய என்னால மறக்க முடியாது, தேவியும் என்னய மறக்காம இருக்கனும், எத்தனை வருஷம் ஆனாலும் நான் தேவிய தான் கட்டிக்குவேன்னு பிள்ளையார்கிட்ட எப்பவே சத்தியம் பண்ணியிருக்கேன். அதான் இப்படி செஞ்சுட்டேன்"


மூனு பேரும் பேசிக்கிட்டு இருக்கும்போது யாரோ அந்தப்பக்கம் போர மாதிரி இருந்தது, உண்மையிலயே யாரோ போனாங்க, ஆனா யாருனு தெரியல, நம்ம பேசுனத எல்லாம் கேட்டிருப்பாங்களோ, வீட்ல சொல்லிடுவாங்களோ, இப்படி பலவாறு யோசிச்சபடியே அவுகவுக வீடு போயி சேந்தாக மூனு பேரும்.



நெனச்ச மாதிரியே நடந்திருச்சு, ராமரோட அம்மா வழக்கமான காலை வேலைகள்ல மும்முரமா இருக்க, வெக்கு வெக்குனு நடந்து வராக நந்தினியோட அம்மா, இந்தாபாருக்கா, நேத்து ராத்திரி உன் மயன் செஞ்ச காரியத்துக்கு இந்நேரம் வேற வீட்டு சனங்களா இருந்தா எங்க அண்ணன வரச்சொல்லி உண்டு இல்லனு ஆக்கியிருப்பேன், ஓம் மொகத்துக்காகத்தான் விடுறேன் ஆமா" னு கத்திட்டு நடந்த விஷயத்தையும் வெவரமா சொல்லிட்டுப்போயிட்டாக.


கண்மாயப்பக்கம் போயிட்டு வீட்டுக்கு வரான் ராமர், நடந்து முடிஞ்ச கூத்து எதும் தெரியாம. வௌக்கிட்டு இருந்த பாத்திரங்கள அப்படியே போட்டுட்டு எழுந்தாக ராமரோட அம்மா,,, "இங்க வாடா, ஒனக்கு வெவரம் தெரிஞ்ச நாள்லருந்து தெருவுல நின்னு யாரு கூடயாச்சும் சண்ட சத்தம் போடறத பாத்திருக்கியாடா? னு கேக்கவுமே ராமருக்கு புரிஞ்சிருச்சு, "இல்லம்மா ஏம்மா னு கேட்டான், ஊரே வேடிக்க பாக்க இன்னிக்கு என்னைய கேவலப்படுத்திட்டியே னு திட்டிக்கிட்டே கையப்பிடிச்சு இழுத்துட்டுப் போனாக பிள்ளையாகிட்ட.

"சத்தியம் பண்ணுடா இனிமேல அவுக வீட்டுக்குப் போக மாட்டேன்,  அந்தப்பிள்ளைய நெனைக்க மாட்டேனு" சரிம்மா நீங்க சொல்றபடியே செய்றேம்மா ஆனா சத்தியமெல்லாம் வேணாம்மா னு எப்படியெல்லாமோ கெஞ்சிப்பாத்தான், ம்ம்ஹூம் பிள்ளையார் மேல சத்தியம் பண்ணிட்டு வர்றதா இருந்தா வீட்டுக்கு வா,,, இல்லனா எங்கேயாச்சும் போயி தொலைஞ்சிரு,, ஒத்த  பிள்ளையும் போச்சுனு இருந்துடுறேன்னு சொல்லிட்டாக, கடைசியா வேற வழியில்லாம, சத்தியம் செஞ்சான் பிள்ளையார்கிட்ட,,   பிள்ளையாரப்பா  "உன் மேல சத்தியம் இனிமேல தேவி நெனைக்கமாட்டேன்."

சரியா ரெண்டு நாள் ஆக, விடுமுறையும் முடிய, மதுரைக்கு கூட்டிட்டுப் போயிட்டாக தேவிய.

                 
            ------------



காலம் தன்னோட சக்கரங்கள வேகமா சுத்த, அதனோட கணக்குல சுமார் மூனு வருஷம் கழிஞ்சிருந்தது. ராமர், சிதம்பரத்தில கல்லூரில தத்துவவியல் மற்றும் சமூகவியல் மூன்றாமாண்டு படிச்சிட்டு இருந்தான். தேவியோட அப்பா குடிச்சு குடிச்சு வயித்துல புண் வந்து இறந்துட்டதாகவும், +2க்கு அப்பரம் தேவி படிக்கலைனும், மதுரைல அம்மாவோட இருக்கிறதாகவும், காத்தோட வந்த சேதி ஒண்ணு ராமர் காதயும் தொட்டுப் போச்சு.



ராமருக்கு கல்லூரில பேராசிரியரா இருக்கிறவர் தான் தவப்ரியன், தத்துவவியல் பாடம் எடுப்பார். பகுத்தறிவுச் சிந்தனையுடையவர், கடவுள் மறுப்புக்கொள்கை நிறைய உடையவர். ராமருக்கு நல்ல நெருக்கமான உறவு இருந்தது அவருடன்.
வகுப்பறையில் பாடம் எடுப்பது போக நேரம் கிடைக்கும் போதெல்லாம், ராமர கூப்பிட்டு வந்து, ஒரே பகுத்தறிவு, கடவுள் மறுப்பு, உலகம் எப்படி உருவாச்சுனு பேசிக்கிட்டிருப்பார்.

ராமர் எல்லாத்தையும் தலய தலய ஆட்டி கேட்டுக்குவானே தவிர எதயும் மூளைக்கு கொண்டு போக மாட்டான். அவனுக்குத் தெரிஞ்சதெல்லாம் பிள்ளையாரும், அவங்க அப்பா சிவன் படைச்சது தான் இந்த உலகங்குறது தான். அதுக்கு மேல அவனுக்கு கடவுளப்பத்தி எதுவும் தெரியாது. அதுக்கு மேல தெரிஞ்சுக்கவும் விரும்பல. இது கண்மூடித்தனமான நம்பிக்கை, இத நீ மாத்தணும், ஒரு விஷயத்த பத்தி முடிஞ்சவரைக்கும் தெரிஞ்சுக்கிட்டு அப்பரம் நம்பிக்கை வையினு அவனோட அடிக்கடி வாதம் செய்வார் பேராசிரியர்.



கடவுள் படச்சது இல்ல இந்த உலகம், கோடான கோடி வருஷங்களுக்கு முன்னாடியே அணுக்கலால ஏற்பட்ட "பெருவெடிப்பு(பிக்பேங்) ல தான் நம்ம பூமியும், மற்ற கிரகங்களும், ஒட்டுமொத்த அண்டமும் உருவானது, அப்பரம் உயிரினங்கள், தோன்றி ஒரு செல் உயிரி,  இரு செல் உயிரினு படிப்படியா பரிணாம வளர்ச்சியடைஞ்சு கடைசியாத் தான் இப்ப நாம இருந்த முழு மனித வடிவத்துக்கு வந்திருக்கோம் னு சொல்லி, பெருசா வாதம் செஞ்சார் பேராசிரியர்.



சார்லஸ் டார்வினின் பரிணாமக்கொள்கையையும், பிக்பேங் தியரியையும், அவரோட வாதத்துக்கு ஆதாரங்களா பேராசிரியர் வைப்பதுண்டு, இன்னும் பல உள்நாட்டு, வெளிநாட்டு பகுத்தறிவாளர்கள்,தத்துவாசிரியர்களயும், அவர்கள் எழுதிய புத்தகங்களையும், சிந்தனைகளையும், ராமருக்கு அறிமுகம்  செய்துவைத்தார்.



சார், இது எல்லாம் உங்களோட நம்பிக்கை அது வேற, அத மாதிரி என்னோட நம்பிக்கை அது வேற னு எதிர் வாதம் செய்ய ஆரம்பித்தான் ராமர். இயற்கைக்கு மேல ஒரு சக்தி இருக்குனு சொல்லுறாங்களே அந்த சக்திய நான் கடவுளா நினைச்சிட்டு போறேன்னான் ராமர்.  அப்போதைக்கு அவனுக்கு தெரிஞ்ச வெவரங்கள   வச்சு முடிஞ்ச வரைக்கும் விவாதம் செஞ்சு பார்த்தும், ஒவ்வொரு முறையும் பேராசிரியரே வெற்றி பெறுவார்.


கடவுள் இல்லைனு இவ்வளவு விவரங்களோடு பேராசிரியர் விவாதிக்கும்போது, நம்மாள ஏன் கடவுள் இருக்கார் என்பதற்கான ஆதாரங்கள சேகரிக்க முடியாது?!?! கட்டாயம் ஒரு போதுமான ஆதாரங்களோடு உங்க முன்னாடி வந்து நிக்கத் தான் போறேனு தனக்குத் தானே உறுதியெடுத்துக்கொண்டான் ராமர்.



கொஞ்ச காலமாவே உடம்பு முடியாம இருந்த அம்மாவுக்கு, சீரியஸா இருக்குனு கல்லூரி தொலைபேசிக்கு தகவல் வந்தததை அடுத்து, ஊருக்கு கிளம்பினான் ராமர். மருத்துவர் கைவிட்ட நெலமயில வீட்டிலயே வச்சிருந்தாக அம்மாவ. ராமர் அப்பாட்ட கேட்டான்,,,, டாக்டர் என்னப்பா சொன்னாங்க? சிறுநீரகம் செயலிழந்துருச்சு, ரொம்ப நாளா கவனிக்காம இருந்திருக்கீங்க, இனிமேல ஒண்ணும் பண்ணமுடியாது வீட்டுக்கு கொண்டு போயிடுங்கனு சொல்லிட்டாங்கப்பா னு அப்பா சொன்னார், இன்னொன்னயும் சேத்து சொன்னார், உயிர் பிரியிறது இன்னும் கொஞ்சம் தள்ளிப்போறதும், போகாததும் கடவுளோட கையில இருக்குனு டாக்டர் சொன்னதாக அப்பா சொன்னத கேட்டதும் பிள்ளையார்கிட்ட போனான் ராமர்.



பிள்ளையாரப்பா, எங்கம்மா சாகக்கூடாது, மரணம் இயற்கையானது, அத மனதார ஏத்துக்க னு பேராசிரியர் சொல்றார், இயற்கையே எல்லாத்தயும் பாத்துக்கனும்னா அப்பரம் நீ எதுக்கு? அல்லா, ஏசு,புத்தர்னு ஆளுக்கொரு கடவுள கை காட்டுற இந்த உலகத்தில எனக்குத் தெரிஞ்சது நீ மட்டும் தான், எங்கம்மாவ காப்பாத்தி உன்னோட இருப்பை நிரூபிச்சிரு. வாய்க்கு வந்தவாறு வேண்டிக்கிட்டு போயிட்டான்.
விடியற்காலம்,, இயற்கையையும், அதுக்கு மேல உள்ள சக்தியையும் வீழ்த்திவிட்டு மரணம், ராமரோட அம்மாவ அணைத்துக்கொண்டது.



இளங்கலை தத்துவவியலில் தேர்ச்சி பெற்றபின் முதுகலைக்கு தொலைநிலைக்கல்வியில் விண்ணப்பித்து விட்டு கூடவே ராணுவத்திற்கும் விண்ணப்பித்திருந்தான் ராமர். அதற்கான பயிற்சியிலும் ஈடுபட்டு ஒண்றிரண்டு தோல்விக்குப் பிறகு இறுதியில் தேர்வாகிவிட்டான் ராணுவத்திற்கு. வருடமொருமுறை ஊருக்கு வத்து அப்பாவப் பாத்துட்டுப் போவான்.


காலக்கணக்கில் மீண்டுமொரு நான்காண்டுகள் ஓடி முடிந்திருந்தது.        இப்போ ரெண்டு வருஷத்துக்கு இடையில ஊரக்கு வராதவன் இப்ப தான் வந்திருந்தான். அப்ப  தான் அந்த அதிர்ச்சியான சேதியும் வந்து சேந்தது. அதாவது ஒண்ணரை வருஷத்துக்கு முன்ன தேவிக்கு கல்யாணமாகி, குழந்தை ஏதுமில்லா நிலைல தேவியோட கணவர் ஆறு மாசத்துக்கு முன்ன ஒரு விபத்துல இறந்துட்டாருன்றது தான் அந்த சேதி. இப்ப தேவி, அம்மாவோட  மதுரைல தான் இருக்கிறதாகவும் பேசிக்கிட்டாக ஊர்ல
வழக்கமா போற மாதிரி பிள்ளையார்கிட்ட போனான் ராமர். மனசு பூராவும் பிள்ளையாரும், பேராசிரியரும் வந்து வந்து போயிட்டு இருந்தாக,.,., ஒரு பேராசிரியர் சொல்றதப் போல கடவுள் யாருமே இல்லையா? எல்லாமே இயற்கையா நடக்குதானு யோசித்து யோசித்து கடைசியா ஒரு முடிவுக்கும் வரமுடியாம பெருங்குழப்பத்துக்கு ஆளான ராமர், இறுதியா ஒரு முடிவெடுத்தான். அதாவது, எந்த ஒரு வகையிலாவது கடவுளோட இருப்பை தான் நேரடியா உணராத வரைக்கும் சாமி கும்பிடப்போறதே இல்லைங்கறது தான் அந்த முடிவு.




இப்ப தேவியோட நெலமயப் பத்தியே எப்போதும் நெனச்சிட்டு இருந்த ராமருக்கு, ராணுவத்தில தன்னோட மேலதிகாரி ஹரிலால் அவதார் சிங் ஞாபகம் வந்தது, திருமணத்த பத்தி ஒரு நாள் பேசிக்கொண்டிருக்கும் போது அவர் சொன்ன ஒரு விஷயமும் ஞாபகம் வந்தது.  அதாவது விதவைப் பெண்களைத் திருமணம் செய்ய துணியிர  ஆண்தான் இந்த சமுதாயத்தின் மிகச்சிறந்த சீர்திருத்தவாதி"  ஏற்கனவே உடைஞ்சு போயிருக்கிற அந்தப்பெண்களோட இதயத்த திரும்ப ஒட்டவைக்கிற ஒரு முயற்சி தான் அந்த ஆணோட துணிவு" னு அவர் சொன்னது ராமரோட மனசில இப்ப திரும்ப திரும்ப ஓடிட்டு இருக்கு.



சமூகசீர்திருத்தவாதி ஒண்ணும் ஆக வேணாம், ஆனா ஒடைஞ்சு போயிருக்குற அந்த இதயத்த ஒட்டவைக்க முயற்சிக்கிற ஒரு பசையா நாம ஏன் இருக்கக்கூடாதுனு யோசிச்சு முடிவு செஞ்சுட்டான். ராமரோட முடிவக்கேட்டு ஆரம்பத்தில தயங்குன அவனோட அப்பா பிறகு சம்மதிச்சுட்டாரு.  ஆனா தேவி சம்மதிக்கணுமே?,????   நேரா போயி பேசிப்பாத்திடலாம்னு முடிவு செஞ்சு, தேவி வீட்டு முகவரிய வாங்கிக்கிட்டு புறப்பட்டாக அப்பாவும், புள்ளையும் மதுரைக்கு.



வாழ்க்கைங்குற இந்த ஓட்டத்தில ரெண்டு வகையான மனுசங்க ஓடுறாங்க. கூட ஓடறவன் தடுமாறி விழுந்தாலும், அவன் மேல ஏறி மிதிச்சு ஓடுறவங்க முதல் வகை. கூட ஓடறவன் தடுக்கி விழுந்தா அவன தூக்கிவிட்டு, தன் கூடவே கூட்டிட்டு ஓடறவன் ரெண்டாவது வகை. ராமர் ரெண்டாம் வகையா இருக்க விரும்புறான்.



பஸ் ஏறி புறப்பட்டாக மதுரைக்கு, ஜன்னலோர சீட்ல உட்காந்த ராமர், தேவிய பத்தின பழைய நியாபங்கள்ல மூழ்கிப்போனான். மதுரை மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டல இறங்கி, ஆட்டோ பிடிச்சு தேவியோட வீட்டுக்கு போறாக. சின்னதா ஒரு வாடகை வீட்ல இருந்தாக தேவியும், அவ அம்மாவும். கலை இழந்து காணப்பட்டாள்,    பௌர்ணமி முழு நெலவா இருந்தவ, தேஞ்சு தேஞ்சு தேய்பிறையா இருந்தா. எப்போதும் அழகா ஆடை அணியிறவ ஏனோ தானோவென இருந்தா. இத்தன வருஷ இடைவெளிக்கு அப்பரம் ராமர பாத்ததும், தன்னோட நிலைய நெனச்சு முட்டிக்கிட்டு வந்த கண்ணீர் மொத்தத்தையும் முழுங்கியே போனா தேவி.



அங்கே நான்கு இதயங்கள் மௌனமாக, எட்டுக்கண்கள் மட்டும் இரண்டு நிமிடங்கள் விழித்திருந்தன. ராமரோட அப்பா தான் மௌனத்த கலச்சாரு. " இந்த பாரு தேவி, நாங்க நல்லா யோசிச்சு தான் இந்த முடிவு எடுத்திருக்கோம், நீ நல்லா இருப்ப, இனி ஒன்னோட வாழ்க்கைல எந்தக் கஷ்டமும் வராது தாயி, தயவு செஞ்சு ஒத்துக்க" னு தங்களோட விருப்பத்த தெரிவிச்சாரு.



மீண்டுமொரு அர மணி நேர மௌனத்துக்கு அப்பரம் சம்மதித்தே விட்டார்கள் தாயும் மகளும். ஒடிந்த சிறகுகளை மீண்டும் ஒட்டவைத்துப் பறந்தது இரண்டு சின்னக்கிளிகள்    அங்கே. மிகச்சிறப்பாக நடந்தது திருமணம், கலந்துகொண்டவர்கள், நாளே பேர், மணப்பெண், மணமகன், மணமகளின் தாய், மணமகனின் தந்தை. வேறு எந்த சம்பிரதாயங்களுக்கும் அங்கே இடம் இருக்கவில்லை. இருமனங்கள் மட்டும் இணைந்த திருமணத்திற்கான முழுமையான உதாணரமாக நடந்தது அந்தத் திருமணம்.




ராமர், ராணவ வேலையை வேண்டாமென்று 27 வயதிலேயே விருப்ப ஓய்வு பெற்று தந்தையையும் கூட்டி வந்து மதுரையிலேயே குடியேறிவிட்டான்.  பூச்செடிகள், மரக்கன்றுகள் விற்கும் சிறிய நர்சரி கார்டன்" ஆரம்பித்தான். காலமெனும் வண்டி மீண்டும் ஒருமுறை வேகமெடுக்க ஐந்தாண்டுகள் ஓடி முடிந்திருந்தது.



இந்த இடைவெளில ராமர், சொக்கனூருக்கு ஒருமுறை கூட போகல, நல்லது கெட்டதுக்கு எல்லாம் அப்பாவையே அனுப்பியிருவான். இப்ப ராமர் தேவி தம்பதிக்கு ரெண்டு கொழந்தைக, ஆணு ஒண்ணு, பொண்ணு ஒண்ணு. தொழிலும் நல்ல வளர்ச்சியைடஞ்சிருந்தது. இப்போது எல்லாரும் சேர்ந்து ஒருமுறை ஊருக்கு போயிட்டு வரலாம்னு முடிவெடுத்தாக. கொழந்தைகளும் சொந்தக் கிராமத்த பாக்க ஆர்வமா இருந்தாக.




புறப்பட்டுட்டாக சொக்கனூருக்கு, புதுசா வாங்குன பழைய கார்ல. வழில ராமரும் தேவியும், சின்ன வயசு, பருவ வயசு நியாபகங்கள அசபோட்டுட்டே வந்தாக. ஊரு வந்திருச்சு. கார ஓரமா சாலைல நிறுத்திட்டு எறங்குனாக எல்லாரும், அஞசு வருஷத்துக்கு அப்பரம் பாக்குறதால ராமரோட பார்வையில ஊரு கொஞ்சம் மாறியிருந்தது. அரசாங்க பணத்துலயும், வெளிநாட்டுப்பணத்துலயும் கட்டுன நெறய வீடுக அங்கங்க பதுசா உருவாகிருந்தது. அந்த வீடுகள கடந்து அவுக வீட்டுக்குப் போனாக, ஆள் புழக்கமில்லததால கொஞ்சம் பாழடஞ்சு போன மாதிரி இருந்தது வீடு. நந்தினி வந்து தேவியயும் கொழந்தைகளயும் கூட்டிட்டு போச்சு. நந்தினி உள்ளூருலயே தான் வாக்கப்பட்டிருந்தது.



வீட்ட கொஞ்சம் கைபாக்கணும்பா(பராமரிப்பு வேலைகள்) னு அப்பா சொன்னாரு, சரிப்பானு சொல்லிட்டு பிள்ளையார்கோயிலப்பக்கம் போயிட்டு வரலாம்னு நடந்தான் ராமர். பக்கத்தில போகாம கொஞ்சம் தூரமாவே நின்னு பாத்தான் பிள்ளையார, அதே பிள்ளையார் உட்காந்திருந்தார் ராமர பாத்துக்கிட்டு.
மேல சின்னதா கோபுரம் மட்டும் புதுசு  கட்டியிருந்தது. ரெண்டு சின்னப்பயக, சின்னவயசுல தான் செஞ்சது போலவே பிள்ளையாரமேல கெடக்குற காஞ்ச பூ, மாலைகள சுத்தம் செஞ்சிட்டு இருந்தாங்கெ.  தன்னைனே பாக்குறதா நெனச்சுக்கிட்டே வீடு வந்தான் ராமர்.



கதவ தொறந்து வீட்டுக்குள்ள போயி நின்னு சுத்தி சுத்தி பாத்தான், ஒடைஞ்சு போயிருந்த ஒரு ஓடு வழியா ராமர எட்டிப் பாத்துட்டு இருந்தது ஒரு மணி உச்சி சூரியன். கிரீச் கிரீச்னு எலிகளோட சத்தத்த கேட்டு மேல பாக்குறான், எப்பவேணும்னாலும் கீழ விழுந்திருவோம் நாங்கனு தொட்டுக்கிட்டு  இருந்த ரெண்டு ஓடுக, எலிக குதிச்சு வௌயாண்டதுல விழுந்தேருச்சு ராமரு தலைக்கு நேரா,,,,,,,, நொடிப்பொழுதுல சுதாரிச்சு  ராமர் வெலகினதும் விழுந்து நொருங்குச்சு ரெண்டு ஓடும ரெண்டாயிரம் சில்லுகளா,,,,,,,,,,  அவனே அறியாம, அவனோட வாயிலயிருந்து வந்து விழுந்தது வார்த்தைகள்,,,,,,,,,,,,,    "நல்ல வேளை நூலிடையில தப்பச்சோம்,, இல்லனா என்னவாயிருக்கும்,,, பிள்ளையாரப்பா தான் காப்பாத்தியிருக்கார்!!!!!!


             ------------
          நன்றி வணக்கம்!


1 கருத்து:

  1. மிக நல்ல கதையோட்டம். சின்ன மனசில முளைக்கிற ஆசைகள், நம்பிக்கைகள் கதை முழுவதும் இழையோடி இருப்பது அருமை.

    பதிலளிநீக்கு